அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்குப் பிரத்யேகமாக, நான்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. 300 கி.மீ. தொலைவுக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஏற்கெனவே 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இருக்கைகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படும் என சமீபத்தில் முடிந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன் அடிப்படையில், தற்போது 4 இருக்கைகள் ஒதுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகளும், இருக்கை மட்டும் உள்ள பேருந்தில் 4 இருக்கைகளும், இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 2 இருக்கை, 2 படுக்கைகளும் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இணையதளம் (www.tnstc.in) அல்லது tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யும்போது, பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும். இருக்கைகளை பெண்கள் முன்பதிவு செய்யாத பட்சத்தில் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா