பாரத் குடியரசு என X தளத்தில் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியில் வரும் 9, 10 ஆம் தேதிகளில் ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜி20 நாடுகள் அமைப்பின் தலைவர்களுக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருகை தருமாறு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல தமிழக ஆளுநர் ரவியும் தனது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் இந்தியா என்று கூறுவதற்கு பதிலாக பாரதம் என்றே குறிப்பிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாரத் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிட்டு ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்பது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது X தளத்தில் பாரத நாட்டில் உள்ள அசாம் மாநில முதலமைச்சர் என்று மாற்றியுள்ளார். மேலும் பாரத குடியரசு என்றும், Amrit Kaal நோக்கிய இந்த பயணத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையுடனும் நடைபோடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.







