குடியரசு தின விழாவையொட்டி, வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் ஆர்.ரன்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, முப்படை அதிகாரிகள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் வரவற்றனர். இதைதொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து மேடைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராணுவ படைப்பிரிவு, கடற்படை, ராணுவம், விமானப்படை, சி.ஐ.எஸ்.ப்., சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை, கடலோர பாதுகாப்பு குழு, ஊர்க்காவல் படை உள்பட படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை தலைமை காவலர் சரவணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதேபோல், ஆண் செவிலியர் ஜெயக்குமார், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணிசாமி, கன்னியாகுமரியை சேர்ந்த ஶ்ரீகிருஷ்ணன், தஞ்சாவூரை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கும் அண்ணா பதக்கங்களை வழங்கி அவர் கவுரவித்தார்.
மேலும், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை கோவையைச் சேர்ந்த இனாயத்துல்லாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கோவையில், மத நல்லிணக்கம் மற்றும் இந்து- இஸ்லாமியர் சமூகத்தினர் இடையே ஒற்றுமை, அமைதி நிலவும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருவதை கவுரவிக்கும் வகையில் இனாயதுல்லாவுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது.திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தியை பெற்றதற்காக, வேளாண்துறை சிறப்பு விருதை பொன்னமராவதியை சேர்ந்த வசந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, ஆய்வாளர் ஜெயமோகன், உதவி ஆய்வாளர்கள் சகாதேவன், இனாயத் பாஷா, தலைமைக் காவலர் சிவகனேசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை மற்றும் திண்டுக்கல் வட்ட காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கண்டுகளித்தனர்.