இரும்பு பூட்டால் பெண் கவுன்சிலரின் மண்டையை உடைத்த மாமியார்

  சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பெண் கவுன்சிலருக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி, மருமகளின் மண்டையை மாமியார் இரும்பு பூட்டால் தாக்கி உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மடிப்பாக்கம் 188-வது …

 

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பெண் கவுன்சிலருக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி, மருமகளின் மண்டையை மாமியார் இரும்பு பூட்டால் தாக்கி உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை மடிப்பாக்கம் 188-வது  வட்ட திமுக செயலாராக இருந்த செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் 1ந்தேதி கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.  சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெறவிருந்த சூழலில் நடைபெற்ற இந்த படுகொலை திமுகவினரிடையேயும் பிற அரசியல் கட்சியினரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தெற்கு மாவட்ட திமுகவில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த மடிப்பாக்கம் செல்வத்தின் மரணம் ஏற்படுத்திய  தாக்கம் எதிரொலியாக, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அவரது காதல் மனைவி சமீனாவுக்கு வாய்ப்பு வழங்கியது திமுக.

அதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சமீனா செல்வம், மக்கள்
பணியில் ஈடுபட தொடங்கினார். கணவர் செல்வம் இல்லாத நிலையில்  அவருடைய தாய் லிசி(வயது 57) மருமகள் சமீனாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் மாமியார்-மருமகள்  இடையே வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. “நாங்கள்தான் உன்னை கவுன்சிலர் ஆக்கினோம் அதற்காக
மாதம் மாதம் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்” என மருமகள் சமீனாவிடம் கேட்டு மாமியார் லிசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில், வீட்டிலிருந்த இரும்பு பூட்டைக் கொண்டு கவுன்சிலர் சமீனாவின்  மண்டையை உடைத்துள்ளார் மாமியார் லிசி. இதில் பலத்த காயமடைந்த சமீனா,  இரத்த வெள்ளத்தில் பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார்,  சமீனா செல்வம் அளித்த  புகாரின் பேரில் அவரது மாமியார் லிசி மீது 294(b), 323, 324, 341, 506(2) ஆகிய ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.