மத்திய அரசு காவல்துறையைக் கொண்டு டெல்லியில் வன்முறை அரசியலை மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து அமலாக்கத்துறை கடந்த 3 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டின்பேரில் விசாரணை நடத்தப்படுவதாகவும், அமலாக்கத்துறை சட்டத்தை மீறி செயல்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த 3 நாட்களாக டெல்லியில் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது டெல்லி போலீசார் அத்துமீறி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தி, பலரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்பட மூத்த தலைவர்கள் பலர் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், பலரை கைது செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடமும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடமும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புகார் அளித்தனர்.
வெங்கைய்யா நாயுடுவிடம் புகார் தெரிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், எழுத்துப்பூர்வ உத்தரவு அளிக்காமல் எம்பிக்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்காதது குறித்தும் வெங்கைய்யா நாயுடுவிடம் புகார் அளித்ததாகத் தெரிவித்தார். மேலும், தாங்கள் கைது செய்யப்படுவது குறித்து எம்பிக்கள் கேட்டதற்கு, போலீசார் உரிய பதில் அளிக்காதது குறித்தும், உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பது குறித்தும் புகார் தெரிவித்திருப்பதாக ப. சிதம்பரம் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவைத் தலைவருக்கு இருப்பதால், இது குறித்து அவரிடம் நேரில் முறையிட்டுள்ளதாக மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மூத்த தலைவர்கள் பலர் மீதும் டெல்லி போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலை நேற்று நடத்தியதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சருமான சச்சின் பைலட், இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை என கூறினார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் பேரணி நடத்துவதற்கும் போலீசார் அனுமதி மறுப்பதாகக் குறிப்பிட்ட சச்சின் பைலட், இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, டெல்லி போலீசாரைக் கொண்டு மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை, வன்முறை அரசியலை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் தொண்டர்களை தீவிரவாதிகளைப் போல் டெல்லி போலீசார் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்படுவதற்கும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களிலும் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.