ஆயுள் சிறைவாசிகள் விடுதலை – சிறை நிரப்பும் போராட்டத்தில் தமிமுன் அன்சாரி கைது..!

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார். நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக…

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்.

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், இன்று சேலம் மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் இப்பிரச்னை தீரும்வரை சம்மந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு நீண்ட சிறைவிடுப்பு வழங்க வேண்டும் எனவும் வழக்கு, சாதி மற்றும் மதத்தின் பெயரால் சிறைவாசிகள் விடுதலையில் பாராபட்சம் காட்டப்படக்கூடாது என்றும்  இந்த போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு சிறைவாசிகள் சிலரின் முன் விடுதலையை மதத்தை காரணம் காட்டி, உண்மைக்கு மாறான கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதற்கு இப்போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர். தியாகு ,  மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஆ. அனந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மோகன், SDPI கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் D.ஷெரிப் பாஷா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.