ஜவான் திரைப்பட வெற்றிக்காக ஷாருக்கான், அட்லி-க்கு நடிகர் விஜய் தன் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.
இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதோடு, உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ₹500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.
தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வந்த நிலையில், உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலித்துள்ளதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இதற்கு முன் யாரும் பார்த்திராத வெற்றி என படக்குழு வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர் பக்கத்தில் ஜவான் திரைப்பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான், விஜயின் அடுத்த திரைப்படத்திற்காக ஆர்வமுடன் காத்திருப்பதாகவும், I love Vijay sir! என்றும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் விஜய், தன் எக்ஸ் தளத்தில் ஜவானுக்காக ஷாருக்கான், அட்லியைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும், ‘ஐ லவ் யூ ஷாருக்கான் சார்’ எனக் குறிப்பிட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
https://twitter.com/actorvijay/status/1706994514433384738







