எக்ஸ்-ன் நிறுவனரான எலான் மஸ்க் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் இடையே வார்த்தைப் போர் வலுத்து வரும் நிலையில் ”சண்டைக்கு தயார்..லொகேஷன் அனுப்புங்கள்” என மார்க் ஜுக்கர்பர்க் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ்-ன் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் அதிரடியான பல முடிவுகளை எடுத்து இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கம். டிவிட்டரை அவர் வாங்கியதிலிருந்து அடிக்கடி சர்ச்சையாகி வருகிறார். ட்விட்டர் பெயரை சமீபத்தில் மாற்றினார் . மேலும் ட்விட்டரின் லோகோவை அவர் பலமுறை மாற்றியிருக்கிறார்.
சமீபத்தில் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் “ மஸ்க் மற்றும் ஜுக்கர்பர்க்” இடையிலான சண்டை லைவ் ஸ்டிரீமில் ஒளிபரப்பப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கூண்டு தயாராக இருக்கிறது என்றும் தனது மகனுடன் பயிற்சி செய்வது போன்ற படங்களையும் மஸ்க் பதிவிட்டிருந்தார்.
நேரலையில் ஒளிபரப்பாகும் மஸ்க் மற்றும் ஜுக்கர்பர்க் இருவரின் சண்டையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நன்கொடையாக வழங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கு விதமாக மார்க் ஜுக்கர்பர்க் “என்னுடைய கவனத்தை வேறு விசயங்களில் செலுத்த இருக்கிறேன்” என தனது த்ரெட்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மார்க் ஜுக்கர்பர்கின் பதிவையொட்டி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க்
” டெஸ்லா காரின் முழுமையான செல்ஃப் டிரைவிங் மோடை சோதனை செய்ய பாலோ ஆல்டோவில் மார்க் ஸூக்கர்பர்க் வீட்டிற்குச் செல்கிறேன்.எக்ஸின் லைவ்ஸ்ட்ரீம் வசதியையும் ஏற்கனவே சோதனை செய்து வைத்திருக்கிறேன். இதனால், இந்த நிகழ்வை நேரலையில் நீங்கள் கண்டுகளிக்கலாம். மார்க் ஸூக்கர்பர்க் தன்னுடைய வீட்டுக் கதவை திறந்து பதிலளித்தால், நாங்கள் மோதிக் கொள்வோம்” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்க் ஜுக்கர்பர்க் ”லொகேஷன் அனுப்பவும்” என பதிவிட்டுள்ளார். மேலும் சண்டை குறித்த எலான் மஸ்கின் ட்வீட் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து இதனை குறிப்பிட்டுள்ளார். இருவரின் வார்த்தை போர் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.







