ரேசன் கடைகளில் வண்ணங்கள் பூசி புதுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொண்டு சேர்க்கும் இடம் தான் ரேசன் கடைகள். பொங்கல் பரிசு தொகுப்பு முதல் கொரோனா நிவாரண பொருள் வரை ரேசன் கடைகள் மூலம் தான் மக்களுக்கு சென்றடைகிறது. அத்தகைய ரேசன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. கட்டடங்கள் மோசமாக உள்ளன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. தற்போது, அவற்றை சரி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 35 ஆயிரம் ரேசன் கடைகள் செயல்படுகின்றன. அதில் கூட்டுறவு துறை சார்பில் 95 சதவீதம் அதாவது, 33,273 கடைகளும், மற்றவை நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான ரேசன் கடைகள் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. அதன் தரத்தை மேம்படுத்தி சரி செய்யும் வகையில் ” நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை” என்ற புதிய முயற்சியை கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி உள்ளார்.
இதன் மூலம் ரேசன் கடைகளை சுத்தப்படுத்தி வண்ணம் பூசுவது உள்ளிட்ட வேலைகளை ரேசன் கடைகளுக்கு சொந்தமான சங்கங்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடன் இணைந்து செய்து வருகின்றனர். சில ரேசன் கடைகளில் புதுமையான ஓவியங்கள், கூட்டுறவுத்துறை வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் அதன் சேவைகள் குறித்தும் வாசகங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
இது மட்டுமின்றி, தற்போது அனைத்து ரேசன் கடைகளுக்கும் ஐஎஸ்ஓ 9000 தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் , ஐஎஸ்ஓ 28,000 விநியோக தொடர் மேலாண்மை , பாதுகாப்பு மேலாண்மை மற்றும் FFSAI தரச்சான்றுகள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரேசன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாவட்டம் வாரியாக புத்தாக்க பயிற்சியும் நடத்தப்படுகின்றன.
ஏற்கனவே வாடகை இடத்தில் இருக்கும் கடைகளுக்கு பதில் சொந்த இடத்தில் புது கடைகள் அமைக்க அந்த பகுதி சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உதவியுடன் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 800 கடைகளுக்கு நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 280 கடைகளுக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேசன் கடைகள் அமைப்பை ஏற்படுத்தவும், அனைத்து கடைகளிலும் கழிப்பறைகள் , மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சாய்தள பாதை போன்றவற்றை ஏற்படுத்தவும் , கடைகளுக்கு அருகில் கூடுதல் இடம் இருந்தால் சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்தவும் கூட்டுறவுத்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே 800 கடைகள் வரை மினி சூப்பர் மார்க்கெட் போன்ற செயல்பட்டு வருகின்றன, தொடர்ந்து கிராமப்புற அங்காடிகளாக மினி மளிகை கடைகள் போல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து ரேசன் கடைகளையும் சுத்தப்படுத்தி வண்ணம் பூசுவது பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.









