“ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகத்தை தடுக்க இந்த நடவடிக்கை…”- கூட்டுறவுத்துறை செயலாளர்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து…

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் தனியார்
தொண்டு நிறுவனங்கள் இணைந்து விவசாயிகளுக்கு நெற்களம் அமைத்து விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கும் விழா  நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவுத்துறை முதன்மை செயலரான ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்டு விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட
நெற்களத்தை தொடங்கி வைத்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ” மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அதன் பெயரில்
அனைத்து பகுதிகளிலும் உள்ள நியாயவிலை கடைகளில்  தரமான பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறிய அவர்,  ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதாக  தெரிவித்தார்.

ஆகவே இதை தடுக்கும் வகையில் நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வரப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  பகல் நேரங்களில் பொருட்கள் இறக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் தரமற்ற பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக மாற்றி மாற்று ஏற்பாடு செய்து தரமுடியும் என்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.