இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே, பொதுஜன பெரமுன அதிருப்தி எம்.பி. டலஸ் அழகபெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுரா திசநாயக்க ஆகிய மூன்று பேரும் போட்டியிட்டனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு  நடந்தது. மொத்தம் உள்ள 225 எம்பிக்களில், 223 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த எம்பி சமன்பிரியா ஹெராத் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அப்படியே நாடாளுமன்றம் வந்திருந்து வாக்கு அளித்தார்.

மேலும், இந்த தேர்தலை 2 எம்பிக்கள் புறக்கணித்தனர். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தம் பதிவான 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபராக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட டலஸ் அழகபெரும 82 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

கோத்தபய ராஜபக்சேவின் பதவிக் காலமான நவம்பர் 2024ம் ஆண்டு வரை புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே செயல்படுவார். 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ரணில் விக்ரமசிங்கே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.