தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவிற்கு ‘நாட்டு நாட்டு’ டான்ஸ் கற்று தந்த ராம்சரண் : வைரல் வீடியோ

கோல்டன் குளோப் விருது பெற்று, ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் தேர்வாகி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பாடல் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் . படம் வெளிவருவதற்கு முன்பே பட்டி தொட்டியெல்லாம்…

கோல்டன் குளோப் விருது பெற்று, ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் தேர்வாகி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பாடல் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் .

படம் வெளிவருவதற்கு முன்பே பட்டி தொட்டியெல்லாம் கலக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்த இப்பாடலுக்கு ஆடாத இளசுகளே இல்லை . இந்நிலையில் நடிகர் ராம்சரணிடம் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான டான்ஸ் மூவ்மண்ட் கற்றுக்கொள்வது போன்ற வீடியோ பதிவு தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் என இரு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததோடு, விருதுகளையும் தொடர்ந்து அள்ளி வருகிறது. அந்த வரிசையில் ஜனவரியில் நடந்த 80வது கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பாடலாக எம்.எம். கீரவாணி இசையமைத்த தெலுங்கு மொழிப் பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகி வரலாறு படைத்திருந்தது. இது தவிர உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ள இப்பாடலை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பாடல் வரிகளும், நடன அசைவுகளும் பலரையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற இ-பிரிக்ஸ் ரேஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம்சரண் மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் ராம்சரணிடம் ‘நாட்டு நாட்டு’ பாலுக்கான ஹூக் டான்ஸ் ஸ்டெப்புகளை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கற்று கொண்டதோடு அதனை வீடியோவாகவும் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “ரேஸ் தவிர, ஹைதராபாத் இ-பிரிக்சிஸ் நிகழ்வில் ஒரு உண்மையான போனஸ் எனக்கு என்ன வென்றால் ராம்சரணிடம் நாட்டு நாட்டு பாடலுக்கான அடிப்படையான ஸ்டெப்ஸ்களை கற்றுக் கொண்டதுதான். ஆஸ்கார் விருதாளர்களுக்கு நன்றியும், நல்வாழ்த்துக்களும், நண்பரே!” என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருந்தார்.

மில்லியன் கணக்கான பார்வைகளையும், 60 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து வரும் இந்த வீடியோ பதிவிற்கு ரிப்ளை செய்திருந்த நடிகர் ராம்சரண் ”ஆனந்த் ஜி நீங்கள் என்னைவிட வேகமாக அந்த நடன அசைவுகளை செய்தீர்கள். உங்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவின் சார்பில் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.