மாநிலங்களவை எம்.பியாக எ முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சராக இருப்பவர் எல் முருகன். இவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய இணையமைச்சராகச் செயல்பட்டு வருகிறார்.இவரது மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை எம்பிக்கள் என்பது கட்சி எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளை மட்டும் பைபற்றிருந்தது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் காலியான 5 மாநிலங்களவை எம்பி பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், உமேஷ்நாத் மகாராஜ், பன்சிலால் குர்ஜார், மாயா நாரோலியா மற்றும் காங்கிரஸ் சார்பில் அசோக் சிங் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தார்.
காலியான 5 இடங்களுக்கு 5 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்த நிலையில் அவர்கள் 5 பேரும் போட்டியின்றி நேரடியாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் எல் முருகன் அடுத்த 6 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





