விவசாய பிரச்னைகள் குறித்து இன்றே விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் இன்று நடக்கும் நிகழ்வுகளை ஒத்திவைத்து, வேளாண் மசோதாக்கள், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று, திமுக எம்.பி திருச்சி சிவா, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சுகேந்து சேகர்ராய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி எலமாறம் கரீம் உள்ளிட்டோர், மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இன்று காலை 9 மணிக்கு மாநிலங்களவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஆனால், மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. அப்போது பேசிய வெங்கைய்யா நாயுடு, விவசாயிகள் போராட்டம் குறித்து, குடியரசு தலைவர் உரையில் பேசப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். எனவே இது குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற உள்ளதாகவும், எனவே நாளை மாநிலங்களவையில் விவாதம் நடத்தலாம் என்றும், வெங்கைய்யா நாயுடு கூறினார். ஆனால், அவரது கருத்தை ஏற்க மறுத்து ,மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து, 10:30 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.







