பிரதமர் மோடி செந்தமிழ் வரிகளை மேடைகளில் பேசி வருவது பாராட்டுக்குரியது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் தமிழ்த்தாய் 73-தமிழாய்வு பெருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி செந்தமிழன் வரிகளை மேடைகளில் பேசி வருகிறார். உண்மையாகவே தமிழ் அகழ்வாய்வுக்குரிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்தான். தமிழ் வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து கோப்புகளையும் என்னிடம் அனுப்பிவிட்டார்; அந்தளவிற்கு ஈடுபாட்டோடு அவர் செயல்பட்டு வருகிறார்; உள்ளபடியே அவரை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியுடன் தொல்லியல்துறைக்கு 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்மூலம் தமிழகத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. 2800 ஆண்டுக்கு முன்னரே தமிழ் இலக்கிய வளத்தோடு இருந்த மொழி என கீழடி நிரூபித்துள்ளது பிரஞ்சு மொழியை போல தமிழையும் வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பேரறிஞர் அண்ணா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை அமைத்தார். யுனோஸ்கோவின் அறிவிப்புப்படி உலக அளவில் தாக்கம் கொண்ட 14வது மொழியாக தமிழ் உள்ளது. விரைவில் முதல் 10 இடங்களில் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.







