ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைதந்திருக்கிறார். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிவடைந்து அண்மையில் இதற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் ஆக.10-ம் தேதி அதாவது இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது.
ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) தொடங்கியது. அண்மையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான அஜித்தின் ‘துணிவு’ படத்தின் அதிகாலைக்காட்சியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அதிகாலைக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. சிம்புவின் ‘பத்து தல’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மாவீரன்’ என எந்த படங்களுக்கும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை.
இதனால் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், காலை 4 மணி காட்சிகள் இல்லை என்ற அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள் இருக்கின்றனர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இப்படத்தை வெளியிடும் திரையரங்குகளில் முதல்நாளுக்கான டிக்கெட்கள் முன்பதிவு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளன.
திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தின் அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளும் முடிவடைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.







