ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற திரு ஆடிப்பூர தேரோட்டத்தில் பக்தர்கள் ’கோவிந்தா கோவிந்தா’ என
கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் விழா மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். ஸ்ரீஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் திருநாளான அன்று இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது. பின்னர் 5-ம் திருநாளான கடந்த 18-ம் தேதி ஐந்து கருட சேவையும் 7-ம் திருநாளான கடந்த 20-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. இந்நிலையில் 9-ம் திருநாளன ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெற்றது.
திரு ஆடிப்பூர தேர்த் திருவிழாவை காண தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடிப்பூரம் எனப்படுவது ஸ்ரீஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். இந்நாளில் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாரை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம். மேலும் திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேரை வடம் பிடித்து இழுத்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
முன்னதாக இன்று காலை 5 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மதுரை கள்ளழகர் சூடி கழைத்த வஸ்த்திரத்தை உடுத்தி திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் தேரானது காலை 8.50 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
இந்த தேரானது 96 அடி உயரம் கொண்டது. இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷத்துடன் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாக தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று விருதுநகர் மாவட்டம் உள்ளுர் விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர்.
இந்த தேரோட்டத்திற்காக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.







