எழுத்து: பிரபாகரன்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரைசாவுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ஹரிஸ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகையாக விருதுகளை வாங்கிக் குவித்த ரைசா, தனது துள்ளலான நடிப்பின் மூலம் இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து, படங்களில் நடித்துவரும் ரைசா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு காரணம், அழகுப் பதுமையாய் வலம்வந்த ரைசாவின், வலது கன்னம் வீங்கிப் போய் காட்சியளித்தது தான்.

சமூக வலைதளங்களில் அவரது முகம் குறித்த சர்ச்சைகள் பேசும் பொருளாகிய நிலையில், அவரே விளக்கம் அளித்தார். முகத்துக்கு எளிமையான முறையில் ஃபேசியல் செய்ய தோல் மருத்துவர் பைரவி செந்தில் என்பவரிடம் சென்றதாகவும், அவர் தேவையில்லாத சிகிச்சை மேற்கொண்டதே தனது முக மாற்றத்துக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார் ரைசா.
இதனை முற்றிலுமாக மறுத்த தோல் மருத்துவர் பைரவி செந்தில், தங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக ரைசா மீது பரஸ்பரம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

ரைசாவிற்கு இதே சிகிச்சையை பலமுறை செய்துள்ளதாக தெரிவித்த அவர், மருத்துவர்களின் அறிவுரையை முறையாக பின்பற்றாதபோது இதுபோன்று வீக்கம் ஏற்படும் என்றும், இந்த காயம் தானாகவே சரியாகிவிடும் என்பதை ரைசா நன்கு அறிவார் என்றும் கூறினார். இந்நிலையில், தவறான சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு தோல் மருத்துவர் பைரவி செந்திலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி சிகிச்சை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடு வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அழகு நிலையங்களை நோக்கி இளைஞர்களும், யுவதிகளும் படையெடுக்கத் தொடங்கியிருக்கும் இந்த காலத்தில், ரைசாவுக்கு நேர்ந்த துயரம் அச்சத்தை உருவாக்கி உள்ளது.