ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் மின்சார ரயில் புறப்படத் தயாராக இருந்தது. அங்கு பெண்களுக்கான பெட்டியில் பாதுகாப்புப் பணியில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆசீர்வா (29) என்பவர் இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றுள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்த ஆசீர்வா இது பெண்கள் பெட்டி எனவும், இதில் ஏறக்கூடாது எனவும் அந்த நபரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை காவலரான ஆசீர்வாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே காவல் துறையினர் ஆசீர்வாவை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆசீர்வா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெண் காவலரை கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல், முறையற்ற தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைத் தேடி வருகின்றனர்.
ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை கத்தியால் குத்திய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








