கர்நாடகாவில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்குச் செல்லும்முன் மாமிசம் உண்டதாக எழுந்த சர்ச்சை குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவின் கொட்லிபேட்டையில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு கடந்த 18ம் தேதி சித்தராமைய்யா சென்றார். அவர் மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றதாகவும், இதன் மூலம் அக்கோயில் சார்ந்த மத நம்பிக்கைக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளதாகவும் பாஜகவைச் சேர்ந்த சிலர் சர்ச்சையை ஏற்படுத்தினர்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தான் மாமிசம் சாப்பிட்டது ஒரு பிரச்னையா என கேள்வி எழுப்பினார். சைவம், அசைவம் இரண்டும் சாப்பிடும் வழக்கம் தனக்கு உண்டு என தெரிவித்த அவர், இது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்றார். பிரச்னை இல்லாததை பாஜக பிரச்னையாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கோயிலுக்குச் செல்லும் முன் விரதமிருந்து செல்பவர்கள் இருக்கிறார்கள், சாப்பிட்டுவிட்டு செல்பவர்கள் இருக்கிறார்கள், கடவுளுக்கு மாமிசம் படைப்பவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்த சித்தராமையா, இது எதுவும் நம் சமூகத்தில் புதிதல்ல என்றார். உண்மையில் பசவேஸ்ரா கோயிலுக்குச் சென்றபோது தான் மாமிசம் சாப்பிட்டுவிட்டுச் செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாடீல், பன்றிக்கறி சாப்பிட்டுவிட்டு மசூதிக்குச் செல்ல துணிவு இருக்கிறதா சித்தராமைய்யாவுக்கு சவால் விடுத்தார். இதற்கு பதில் அளித்த சித்தராமைய்யா, தனக்கு ஆட்டு மாமிசம், கோழி மாமிசம் என இரண்டு வகையான மாமிசங்களை மட்டுமே சாப்பிடும் வழக்கம் உள்ளதாகவும் மற்ற மாமிசங்களை சாப்பிடுவதில்லை என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், மற்றவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் தான் தலையிடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.







