கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து, மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி ஹனுமன் பெனிவல், ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், “ ரயில் சேவைகளை, மீண்டும் முழுமையாக தொடங்குவதற்கு, ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.
அதேபோல், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் திருவாரூர் – காரைக்குடி இடையேயான ரயில் சேவையை எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், திருவாரூர் – காரைக்குடி இடையேயான ரயில் சேவையை தொடங்குவதற்கான சூழல், தற்போது இல்லை என பதிலளித்தார்.







