மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி 15 நிமிடம் 42 விநாடிகள் பேசிய நிலையில், சன்சத் தொலைக்காட்சி அதனை சரியாக ஒளிபரப்பவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து காஙகிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பேசினார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக உறுப்பினர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அதானி குறித்து பேசமாட்டேன் எனவும் கூறினார். தனது எம்பி பதவி நீக்க உத்தரவை திரும்பப்பெற்றதற்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஒற்றுமை நடைபயணத்தின் போது அனைத்து தரப்பு மக்களின் குரல்களையும் கேட்டேன் என்றும், உண்மையான இந்தியாவை அந்த பயணத்தின் வழியாக தாம் பார்த்ததாகவும் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம் மணிப்பூர் சென்றதாக கூறிய அவர், இன்று வரை நமது பிரதமர் அங்கு செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை போலும், அதனாலதான் மணிப்பூரை பிளவுபடுத்தி மத்திய பாஜக அரசு உடைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மக்களின் குரல் உங்கள் காதுகளில் கேட்கவில்லை என்றால், வேறு யாரின் குரல் கேட்கும் என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அமித்ஷா, அதானியின் குரல் மட்டுமே பிரதமர் மோடியின் காதுகளில் கேட்பதாக சாடினார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் பிரிந்து நிற்கிறது எனக் கூறிய ராகுல்காந்தி, மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள் என்றும் கூறினார். மணிப்பூர் மக்களை கொன்றதன் மூலம் இந்தியாவை கொன்றுவிட்டார்கள் என ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் தேச பக்தர்கள் அல்லர், துரோகிகள் என குறிப்பிட்டார்.
இவ்வாறு கடும் ஆவேசத்துடன் மக்களுக்காக மக்களின் பிரச்னைகளை முன் வைத்து காஙகிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் 15 நிமிடம் 42 விநாடிகள் பேசிய நிகழ்வுகளை, சன்சத் தொலைக்காட்சி சரியாக ஒளிபரப்பவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சன்சத் தொலைக்காட்சி 11 நிமிடங்கள் எட்டு விநாடிகள் சபாநாயகரை மட்டுமே காட்டியது என்றும் வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே ராகுல் காந்தி காட்டப்பட்டார் எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா










