காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்று ஸ்ரீநகரில் நிறைவடையும் நிலையில், அது கடந்து வந்த காலத்தையும், மாநிலங்களையும் தற்போது பார்க்கலாம்.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. நாட்டில் வெறுப்புணர்வை விதைத்து பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பயணம், நான்கு நாட்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி கேரளாவில் நுழைந்தது. தொடர்ந்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வழியாக ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் நடைபெற்ற ராகுல் நடைபயணம் செப்டம்பர் 29ம் தேதியுடம் கேரளாவில் நிறைவடைந்தது.
அதன் தொடர்ச்சியாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியாக நடைபெற்ற ஒற்றுமை நடைபயணத்தில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் பொறுப்பாளர்களும், பல்வேறு துறை முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், தேசத் தந்தை காந்தியின் பேரன் துஷார் காந்தி போன்றோர் கலந்து கொண்டு ஒற்றுமை நடைபயணத்துக்கு ஆதரவளித்தனர். இது பொதுமக்களுடனான மிகப்பெரிய நேரடி சந்திப்பு நிகழ்ச்சி என காங்கிரஸ் தெரிவித்தது. ஒற்றுமை நடைபயணத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நூறாவது நாளில் மத்தியப் பிரதேசத்தில் நுழைந்த இந்திய ஒற்றுமை நடைபயணம், ராஜஸ்தான் வழியாக ஹரியானாவில் நடைபெற்ற போது அதில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை நடைபயணம், செங்கோட்டையை அடைந்தபோது 3 ஆயிரத்து 122 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்திருந்தது.
டெல்லியில் இந்திய ஒற்றுமை நடைபயணம் நடைபெற்ற போது தமிழ்நாட்டிலிருந்து திருமாவளவன், கமல்ஹாசன் ஆகியோரும் சென்று கலந்து கொண்டனர். அப்போது மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.
டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் வழியாக இறுதியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் நுழைந்தது. கதுவா மாவட்டத்தில் ராகுல்காந்தியை வரவேற்று ஒற்றுமைப் பயணத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பரூக் அப்துல்லா, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு முதலாவதாக திக் விஜயம் செய்தவர் ஆதிசங்கராச்சாரியார் என்றும், அதனை மீண்டும் மேற்கொண்டிருப்பவர் ராகுல் காந்தி எனவும் புகழாரம் சூட்டினார்.
பாதுகாப்புக் குறைபாடுகள், அரசியல் விமர்சனங்கள் என பல்வேறு தடைகளையும் தாண்டி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மணிக்கூண்டு பகுதியில் மூவர்ணக் கொடியை பறக்கவிட்டு வீரவணக்கம் செலுத்தினார். இதில் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீநகரில் பிரம்மாண்ட ஒற்றுமை நடைபெயண நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள எஸ்கே மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.







