காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் சென்று முடிவடைய உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து இன்று ஜம்மு-காஷ்மீருக்குள் நடைப்பயணம் மேற்கொள்கின்றனர்.
கடைசியாக பஞ்சாப்பில் நடைபயணத்தை நிறைவு செய்து நேற்று மாலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நுழைந்தார். லகன்பூர் எல்லையில் ராகுல் காந்தியை ஏராளமானோர் வரவேற்றனர். தனது முன்னோர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதால் இங்கு வந்தது தனது வீட்டுக்கு மீண்டும் வந்தது போல் உணர்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
இன்று காலை ஹட்லி மோர்க் என்ற இடத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார். மோசமான வானிலையால் நடைபயணம் ஒரு மணி நேரம் தாமதமானது. பிறகு நடைபயணம் தொடங்கியதுமே மழை பெய்தது. இருப்பினும் நிறுத்தாமல் தொடர்ந்து நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் சிவ சேனா கட்சியின் சஞ்சய் ராவத், தேசிய மாநாடு கட்சியின் பரூக் அப்துல்லா, அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரும் ஜனவரி மாதம் 25-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டம் பனிஹால் என்ற பகுதியில் தேசிய கொடியை ஏற்ற உள்ளார். அதன்பிறகு ஸ்ரீநகர் செல்லவிருக்கிறார்.