ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் நடைபயணம் இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுதரும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி அடுத்த மாதம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பொருப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ராகுலகாந்தி செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மிரில் முடிக்கிறார் என்றார்.
ஜனநாயகத்தின் இருளை அகற்றவும், இயேசு கிறிஸ்து, ராமரை போல உயிர்த்தெழுகிறார் ராகுல்காந்தி என்றும் தெரிவித்தார். மீண்டும் இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுத்தருவதற்காக நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இந்தியாவைப் போன்ற நாட்டிற்கு இலவசங்கள் தேவை என கூறிய கே.எஸ்.அழகிரி, இலவசம் தேவையில்லை என்பவர்கள் சமூகத்தைப் பற்றி அறியாதவர்கள் என்றும் இயலாதவர்களுக்காகவே இலவசங்கள் என்றும் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








