உத்தரப்பிரதேச வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை அவர் சொந்த வாகனத்தில் செல்ல போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததிலும், வன்முறைச் சம்பவங்களிலும் 8 விவசாயிகள் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற ப்ரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச போலீசார் தடுப்புக் காவலில் வைத்தனர். மேலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி லக்கிம்பூர் செல்லவும் தடை விதித்தனர். இதையடுத்து தடையை மீறி லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்தி தயாரானார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தி லக்கிம்பூர் செல்ல உத்தரபிரதேச காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிற்கு அவர் சென்றார். அவருடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கார் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி உள்ளிட்டோரும் சென்றனர்.
லக்னோ விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர், சொந்த காரில் லக்கிம்பூர் செல்ல முயன்றபோது அதனை தடுத்த போலீசார் காவல்துறையினரின் வாகனத்தில் செல்லக் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல்காந்தி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விமான நிலையத்தில் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் லக்னோ விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல்காந்தி அவரது சொந்த வாகனத்தில் லக்கிம்பூர் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.
இதற்கிடையே உத்தரபிரதேச வன்முறையில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதே போல் சத்திஷ்கர் அரசும் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனிடையே, உத்தரப்பிரதேச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து சண்டிகாரில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கலைந்து செல்ல மறுத்து, போலீசாரின் தடுப்புகளை தாண்டிச்சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டினர்.









