லாலு பிரசாத் யாதவிடம் மட்டன் சமைக்க கற்றுக் கொண்ட ராகுல் காந்தியின் வீடியோ காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவு செய்துள்ளது.
பாட்னா, பெங்களூரு எதிர்க்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ள நிலையில், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் 2 கட்சிகள் இணையும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் நாள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானி விவகாரம் தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதானி குழும முதலீட்டில் சீன நபரின் தொடர்பு குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும் ராகுல் காந்தி சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.
இதன் பின்னர் ராகுல் காந்தி மற்றும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் சந்தித்த வீடியோ காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் மட்டன் சமைக்க கற்றுக் கொடுத்தார். ”சம்பாரன் மட்டன்” எனும் உணவு வகையினை இருவரும் சேர்ந்து சமைத்தனர். இந்த தயாரிப்பின்போது லாலு பிரசாத் “இந்த ஆட்டிறைச்சி பீகாரிலிருந்து கொண்டுவரப்பட்டது” என தெரிவித்தார்.
லாலு பிரசாத் சமைக்கும் முறைகளை சொல்லச் சொல்ல ராகுல் காந்தி சமைத்தார். இதன் பின்னர் உரையாடலை தொடங்கிய ராகுல் காந்தி “அரசியலுக்கு சமையலுக்கும் என்ன வித்தியாசம் என்ன என லாலுவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த லாலு பிரசாத் அரசியல் எல்லாமே கலந்ததுதான் என தெரிவித்தார்.
இதன் பின்னர் அரசியலுக்கான மசாலா என்ன ராகுல் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த லாலு பிரசாத் “ அரசியலுக்கான மசாலா கடின உழைப்பும், அநீதிக்கு எதிரான போராட்டமும் தான்” என தெரிவித்தார்.







