நாட்டில் விவசாயமும் விவசாயிகளும் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று கேரளா சென்றுள்ளார். கன்னூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை, கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து தனது சொந்த தொகுதியான வயநாடு சென்ற ராகுல் காந்தி அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, நமது நாட்டில் இன்று விவசாயமும் விவசாயிகளும் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
உண்மையான ஆதரவு இல்லாததால், தங்கள் சொந்த தொழிலை விட்டு விவசாயிகள் வெளியேறி வருவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அனைத்து விதங்களிலும் அவர்கள் பிழியப்படுவதாகவும் விமர்சித்தார்.
விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
முன்னதாக, கன்னூர் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி வயநாட்டுக்கு காரில் பயணம் செய்தார். அப்போது வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் கூடி நின்று அவரை வரவேற்றனர்.
வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் கடந்த ஜூன் 24ம் தேதி சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பினரால் சூரையாடப்பட்டது. இதையடுத்து, அவர் தனது தொகுதிக்கு இன்று வந்துள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் கேரளாவில் இருக்கும் ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி வயநாட்டில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.