ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் ரதயாத்திரை திருவிழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவின் கடற்கரை நகரான பூரியில் ஆண்டுதோறும் ஜகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரத யாத்திரையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் ரத யாத்திரை பூரியில் தொடங்கியுள்ளது. ஜகந்நாதர், சுபத்ராதேவி, பாலபத்ரா ஆகிய 3 தேர்களும் பூரி நகரை சுற்றி வரும் வைபவம் மிகவும் கோலகலமாக நடைபெறும்.
இந்த ரதயாத்திரை திருவிழாவில் இந்தியாவின் வடபகுதி மற்றும் தென்பகுதி மாநில பக்தர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டு கிருஷ்ண பகவானின் ஆசியை பெற்று செல்வர்.
பூரி ஜகந்நாதர் ஆலய ரத யாத்திரை திருவிழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதவில், ரத யாத்திரையின் சிறப்பு நாளுக்கு வாழ்த்துக்கள். ஜகந்நாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக இறைவனை பிரார்த்திக்கிறோம். நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஜகந்நாதர் ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.








