தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ளது. தேர்தல் களத்தை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேமுதிக மற்றும் ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காந்தியின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கு பெற்றுள்ளார்.
தமிழ் நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத், சுதா, வைத்தியலிங்கம் , மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ராபர்ட் ப்ரூஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன் , தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பர்ட், கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் 2026 தேர்தலுக்கான பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கியமானவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








