ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது தாடியை ‘டிரிம்’ செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று (மே 13) 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தொடர்ந்து, 5-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 20-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ரேபரேலியில் உள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று (மே 13) மாலை காரை நிறுத்திய ராகுல் காந்தி தனது தாடியை ‘டிரிம்’ செய்து கொண்டார். இந்த புகைப்படங்களை பகிரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள், இவரின் எளிமை ஈடு இணையற்றது எனப் புகழ்ந்து வருகின்றனர்.
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யவேண்டிய கடைசி தேதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த ராகுல் காந்தி, நேற்று (மே 13) தனது பரப்புரையை ரேபரேலி தொகுதியில் தொடங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்து ஒருவர் ராகுலின் திருமணம் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல், ‘விரைவில் திருமணம் செய்துகொள்வேன்’ என்று பதிலளித்தார்.







