நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா சாஸ்திரி என்ற பெண் குறித்து அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் 79வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகின்றார். இன்று 79வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாஸ்திரி குறித்து பாராட்டி பேசி உள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
“இன்றைக்கு நான் ஒரு நற்பணி குறித்து குறிப்பிட விரும்புகின்றேன். தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கே ராதிகா சாஸ்திரி என்ற பெண் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் இந்த சேவையை அவர் நடத்தி வருகிறார்.
ராதிகா குன்னூரில் ஒரு கஃபே நடத்தி வருகிறார். கஃபேயில் பணியாற்றும் நண்பர்களுடன் இணைந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைக்காக ராதிகா நிதி திரட்டி உள்ளார். இன்றைக்கு நீலகிரி மலைப்பகுதிகளில் 6 ஆம்புலன்ஸ் சேவைகளை நடத்தி வருகிறார். அவசரகாலத்தில் நோயாளிகளுக்கு தேவைப்படும் உதவியை வழங்கி வருகிறார். ஸ்டெரக்சர், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டியை அடங்கியதாக அவரது ஆம்புலன்ஸ் ஆட்டோ செயல்படுகிறது. நமது பணிகளுக்கு இடையே இது போன்ற சேவைகளை செய்ய வேண்டும்.” இவ்வாறுபிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.







