திண்டுக்கல் அருகே அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூரை சேர்ந்தவர்கள் காட்டப்பன் – செல்வி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் காவியபாலன் என்ற மகன் உள்ளது. சிறுவன் காவியபாலன் பிறந்தது முதலே அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாக மனித உடம்பின் தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும் நிலையில் சிறுவன் காவியபாலனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே இருப்பதால், பிறந்தது முதலே உடல்முழுவதும் தீக்காயம் பட்டதுபோல் இருப்பதாகவும், இதற்கு ஜீன்கள் தொடர்பான பிரச்னையே காரணம் என்று மருத்துவர்கள் கூறுவதாக சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் எவ்வித முன்னேற்றமும், தீர்வும் கிடைக்கவில்லை என்று பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். தற்போது 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் காவியபாலன் படிப்பில் படுசுட்டியாக விளங்குவதாக கூறுகின்றனர்.
தற்போது கொரோனா காரணமாக வருமானமின்றி தவிப்பதாகவும், சிறுவனின் சிகிச்சைக்கு தேவையான தொகையை கூட ஈட்டமுடியவில்லை என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

காவியபாலனின் தந்தை காட்டப்பன் 12ஆம் வகுப்பும், தாய் செல்வி பி.ஏ.வும் படித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் காவியபாலனின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த நோய் தொடர்பான மருத்துவ உதவிக்கு உதவிடவும், தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள மனிதாபிமான அடிப்படையில் கணவன் – மனைவி இருவரில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.