டெல்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சங்கம் விஹார் பகுதியில், தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர் கூறியதாவது:
“நாடு வளர்ச்சியடைய, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டியது அவசியம். டாக்டர் அம்பேத்கர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், வெளிநாட்டில் சிறந்த கல்வியை கற்றவர். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைத்தால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று புதிய அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்த பள்ளிக்கூடங்களில் பல ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்கள் சிறந்த கல்வி வசதிகளை பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும். மேலும் கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையும் விரைவில் தீர்க்கப்படும்” இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.







