படமாக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு… ஹீரோவாக தனுஷ்..?

இசையமைப்பாளரும், பாடகருமான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே, அவரை இசைஞானி என்று பெயர்…

இசையமைப்பாளரும், பாடகருமான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே, அவரை இசைஞானி என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், இளையராஜா. இவர் 1976-ம் ஆண்டு “அன்னக்கிளி” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பொதுமக்கள் மத்தியில் பெரிய கவனத்தையும் பெறுகின்றன.

பண்ணைபுரத்தைச் சேர்ந்த இளையராஜா அன்னக்கிளி படம் துவங்கி சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் வரை இசையால் ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இவர் கால்தடம் பதித்துள்ளார். தற்போது இவரது இசையில் நினைவெல்லாம் நீயடா, ஆர்யூ ஓகே பேபி, விடுதலை 2, கிஃப்ட் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில், நீண்ட நாள்களாக இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து திரைக்கதையை எழுதி வருவதாகவும் இப்படத்தை இயக்குநர் பால்கி இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.  தற்போது, இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இளையராஜா தனிப்பட்ட முறையிலேயே தனுஷின் நடிப்புத் திறனை விரும்புபவர் என காரணம் கூறப்படுகிறது. மேலும், ராஜாவாக நடிக்க தனுஷின் தோற்றமும் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல். இந்த ஆண்டு இறுதியில் இளையராஜா பயோபிக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.