மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி

மாணவர்கள் புத்தக பூச்சியாக மனப்பாடம் செய்து படிப்பதைவிட உலகத்தையும், மொழியையும், இனத்தையும் பற்றி தெரிந்து கொண்டு கல்வி பயின்றால் தான் வளர்ச்சி பெற முடியும் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நான் முதல்வன்…

மாணவர்கள் புத்தக பூச்சியாக மனப்பாடம் செய்து படிப்பதைவிட உலகத்தையும்,
மொழியையும், இனத்தையும் பற்றி தெரிந்து கொண்டு கல்வி பயின்றால் தான் வளர்ச்சி
பெற முடியும் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
விழுப்புரத்தில் உள்ள சட்டக்கல்லூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி
துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவக்குமார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டனர்.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

பிள்ளைகள் படிக்க விரும்புவதை பெற்றோர் படிக்க வைக்க வேண்டும் எனவும்
மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதில் எந்த
படிப்பு, எந்த வேலையாக‌ இருந்தாலும் முதலாமவராகத் திகழ வேண்டும். இதற்காக தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் எத்தனை துறை சார்ந்த படிப்புகள் உள்ளது; எங்கெல்லாம் கல்லூரிகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக கல்வி வழிகாட்டியினை வெளியிட்டுள்ளார்.

கிராமப் புற மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்பதால் அதிகளவு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மாணவர்கள் புத்தக பூச்சியாக மனப்பாடம் செய்து படிப்பதைவிட உலகத்தையும், மொழியையும், இனத்தையும் பற்றி தெரிந்து கொண்டு கல்வி பயின்றால் தான் வளர்ச்சி பெற முடியும். உயர்கல்வி பயிலும் போதே மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வை அறிவியல் கலைக் கல்லூரிக்கும் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாலும், அத்திட்டம் கிராமப் புற மாணவர்களை பாதிக்கும் என்பதாலும் அதனை தமிழக முதலமைச்சர்
தேவையில்லை என கூறுகிறார். அதனால் தான் தமிழகதிற்கு என்று தனிக் கல்வித் திட்டம்
வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.