தூய சைவ உணவுகளை விரும்புவோருக்காக, பிரத்யேக சேவையினை சொமாட்டோ அறிமுகம் செய்துள்ளது.
அந்த வரிசையில் சைவ உணவு பிரியர்களை கவரும் வகையில் சொமாட்டோ புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி சைவ உணவுகளை கோருவோருக்கு, சைவ உணவுகளை மட்டுமே விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் உணவுப் பைகளை பயன்படுத்த சொமாட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தனித்துவ ஊழியர்கள் வழக்கமான சிகப்பு நிறத்திலான ஆடை மற்றும் பைக்கு பதிலாக, பச்சை நிறை டி ஷர்ட் மற்றும் பையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
100% வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த இந்த முயற்சியை எடுத்துள்ளதாக சொமாட்டோ சார்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக சொமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் வெளியிட்ட பதிவு ஒன்றில், “உலகில் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அவர்கள் தங்கள் உணவை எப்படி சமைக்கிறார்கள் மற்றும் அந்த உணவை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ப்யூர் வெஜ் மோட்’ வசதி சொமாட்டோவில் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சைவ உணவுக்கான பிரத்யேக வசதி சைவ உணவு விடுதிகள் மற்றும் சைவ உணவாளர்களை இணைக்கும் இடங்களில் மட்டும் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்படுகிறது. பின்னர் படிப்படியாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக, ’ஒரு அசைவ ரக உணவுக்கூட, எங்களின் பச்சை உணவுப் பெட்டிக்குள் செல்லாது’ என சொமாட்டோ உறுதி அளித்துள்ளது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலவையாக சமூக ஊடகம் உள்ளிட்ட பொதுவெளியில் எழுந்துள்ளன.







