புல்வாமா தாக்குதல் 2019: பிரதமர் மோடி அஞ்சலி

2019ம் ஆண்டு புல்வாமா பயங்கர தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினரை நினைவுக்கூரும் விதமாக இன்று நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். 2019 ஆம்…

2019ம் ஆண்டு புல்வாமா பயங்கர தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினரை நினைவுக்கூரும் விதமாக இன்று நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி பயிற்சிகளை முடித்துவிட்டு முகாமிற்கு திரும்பிய மத்திய ரிசர்வ் படை போலீசாரின் வாகனங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில், சம்பவ இடத்திலேயே 40 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில், வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பு என்பதை மத்திய ரிசர்வ் படை போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய ரிசர்வ் படை போலீஸ் திட்டங்களை தீட்டியது. பின்னர், பிப்ரவரி 29, 2019 அன்று பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுகள் வீசி முற்றிலுமாக அழித்தது. ராணுவத்தினரின் இந்த நடவடிக்கை ஒரு சரியான பதிலடி என அனைவரும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் இந்த பயங்கர சம்பவத்தில் 40 வீரர்கள் வீரமரணமடைந்ததை எண்ணி வருடம்தோறும் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த துயரச் சம்பவம் நடைப்பெற்று இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வீரமரணமடைந்த வீரர்களை நினைவுக்கூரும் வகையில், புல்வாமா மாவட்டம், லேத்போராவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பலியான வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள ரிசர்வ் போலீஸ் படை தலைமையகத்திலும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் பொதுமக்களும் புல்வாமாவில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். அதில் அவர், ” 2019ம் ஆண்டு, இந்த நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நினைவு கூர்கிறேன். அவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க ஊக்கமளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.