மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை பணிக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின்துறையை பொருத்தவரை மின்தடை ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கூடுதலாக ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ள மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மின்துறை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு பலமுறை அழைத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜக யாரால் தேர்தலில் வெற்றி பெற்றது என்று அரசு கொறடா ஆறுமுகம் முதலமைச்சரிடம் பேசிய கருத்தை அவர் தவிர்த்து இருக்கலாம். அரசியலில் கூட்டணி தர்மத்துடன் கூட்டணி வைக்கிறோம். இரண்டு கட்சிகளும் ஒற்றுப் போய் தான் கூட்டணி வைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்தலுக்கு பிறகு யாரால் யார் வெற்றி பெற்றனர் என்று பேசுவதை அவர்கள் தவிர்த்து இருக்க வேண்டும், இருப்பினும் அவர்கள் மீண்டும் சபாநாயகர் மற்றும் என்னுடன் கலந்து பேசுவோம் என கூறி உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையின் போது அனைத்தும் பேசப்படும்.
பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் இடையே சுமுகமான உறவு தற்போது வரை நீடித்து வருகிறது, புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் ரங்கசாமி இருந்து வருகிறார், அவருக்கு தொடர்ந்து எங்களுடைய ஆதரவு உண்டு. இந்த அரசு எந்த பிரச்சினையும் இல்லாமல் ஐந்து ஆண்டு காலங்களை பூர்த்தி செய்யும்.








