மகாராஷ்டிரா மாநில பாட புத்தகத்தில் இடம்பெற்ற புதுக்கோட்டை மாணவி!

மகாராஷ்டிரா மாநில தமிழ் பாடபுத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கே.ஜெயலட்சுமி. 10-ம் வகுப்பு வரை உள்ளூர் அரசுப்…

மகாராஷ்டிரா மாநில தமிழ் பாடபுத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கே.ஜெயலட்சுமி. 10-ம் வகுப்பு வரை உள்ளூர் அரசுப் பள்ளியில் படித்த இவர் அதன்பிறகு பிளஸ் 2 வரை புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். படிப்பு மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இம்மாணவி பிளஸ் 1 படிக்கும்போது நாசாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த 2019-ல் அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் போட்டி நடத்தியது. அதில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார். எனினும், அதற்கான பயண செலவை மாணவியே ஏற்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இது குறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து பலரும் இம்மாணவிக்கு உதவி செய்தனர். அப்போது, அதற்கான முழு தொகையையும் நாங்களே தருகிறோம் என மாணவியிடம் ‘கிராமாலயா’ என்ற ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தோர் நேரில் சந்தித்து தெரிவித்தனர்.

அதற்கு, தேவையான தொகை எனக்கு கிடைத்துவிட்டது என்று கூறிய மாணவிடம் வேறு
ஏதாவது உதவி தேவையெனில் கேளுங்கள் என்றதும், எங்கள் ஊர் மக்கள் கழிப்பறை
இல்லாமல் அவதிப்பட்டு வருவதால், வீட்டுக்கொரு தனிநபர் கழிப்பறை
கட்டித்தாருங்கள் என்று கேட்டுள்ளார். மாணவியின் கோரிக்கையை ஏற்ற அந்த
நிறுவனம், 126 வீடுகளுக்கு மிகக் குறைந்த நாட்களில் கழிப்பறையை கட்டிக்
கொடுத்தது.

வீடு தேடி உதவி செய்ய வந்தவர்களிடம் எனக்கு உதவி வேண்டாம். ஊர் மக்களுக்கு
உதவி செய்து தாருங்கள் என்று கேட்டு கழிப்பறைகளை வாங்கிக் கொடுத்தது அப்பகுதி
மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அம்மாணவி தற்போது கல்லூரியில் பிஏ வரலாறு பாடப்பிரிவில் படித்து வருகிறார். ஜெயலட்சுமியின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி மகாராஷ்டிராவில் உள்ள 7-ம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் 4 பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதை ரெ.சிவா என்பவர் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியின் சமூக அக்கறையானது பிற மாநிலத்தில் பாடமாக அமைந்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜெயலட்சுமி தெரிவிக்கையில், நாசாவுக்கு செல்ல தேவையான தொகை கிடைத்துவிட்ட நிலையில், கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் முழு செலவு தொகையையும் ஏற்பதாக கூறினர். அந்த சமயத்தில் போதுமான தொகை கிடைத்துவிட்டதால் அவர்களிடம் மேலும் தொகையை பெற விரும்பில்லை. அந்நிறுவனத்தினர் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து வருவதையறிந்து, எங்கள்
கிராமத்தில் கழிப்பறைகளை கட்டித்தாருங்கள் என்று கேட்டதன் அடிப்படையில் 126
குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

மேலும், எனக்கு வானியல் படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பவுண்டேசன், ஸ்பேஸ் ஷோன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மூலம்
என்னைப் போன்ற விண்வெளி ஆராய்ச்சி பற்றிய ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறிய ரக செயற்கைகோள்களை உருவாக்கும் பயிற்சி அளித்தனர் என்று கூறினார்.

அதன்படி, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
ஆகியவற்றை அளவிடும் செயற்கைகோளை தயாரித்தேன். கொரோனா பரவலுக்கு முன்பு
இருந்ததைவிட தற்போது கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
ஆகியவற்றின் அளவு குறைந்துள்ளது என்பதை அதன் மூலம் நிரூபித்துள்ளேன். வானியல் படிப்பு என்பது எனது ஆசை. மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்றால் இந்திய ஆட்சி பணிக்கு வரவேண்டும். ஆகையால்தான், பி.ஏ வரலாறு படித்து வருகிறேன். எனது கனவு நனவாகும் என்று தெரிவித்தார்.

இவ்வாறு நாசாவுக்கு முயற்சி செய்தது, கழிப்பறை கட்டிக்கொடுத்தது, சிறிய வகை
செயற்கைகோள் தயாரிப்பு போன்றவற்றை மகாராஷ்டிரா மாநிலத்தின் மாநில
பாடநூலாக்கம் மற்றும் பாடத்திட்டட ஆய்வுக்கழகத்தின் சார்பில் 7-ம் வகுப்பு
தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெறச் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைவருக்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.