தமிழகத்தில் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த தருணத்தில் அதன் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள நரிக்குறவர்களையும் அப்பட்டியலில் இணைத்து அங்கீகரிக்க புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், எம்எல்ஏவுமான இரா.சிவா வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வாழ்வாதாரம் குன்றி, சமூகத்தில் கடைகோடி அந்தஸ்தை பெற்று பொருளாதாரத்தில் மிகவும் தாழ்வுற்ற சமூகம் உண்டென்றால் அது நரிக்குறவர் – குருவிக்கார சமுதாயம் என்றால் அது மிகையாகாது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு காலம் அவர்கள் வாழ்வில் ஏற்படாத வெளிச்சம் இன்று ஏற்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். கடைகோடி மனிதனுக்கும் கடமையாற்றும் திராவிட மாடல் திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அம்மக்களின் இன்னல் போக்க எடுத்த நடவடி்ககைகள் நாடே அறியும்.
நரிக்குறவர் சமூக மக்களின் வீட்டிற்கே சென்று உணவருந்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களின் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு கண்டதை அனைவரும் அறிவர்.
சட்டப்பேரவையில் அம்மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உறுதி அளித்து அதன்படி பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய காரணத்தால் இன்று மத்திய அரசு நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட முடிவு செய்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இதன்மூலம் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் அச்சமூக மக்களின் வாழ்வு மேம்படும்.
இந்த வாய்ப்பு புதுச்சேரி நரிக்குறவர் சமூக மக்களுக்கு கிடைக்கவில்லையே என்பதற்கு அங்குள்ள அரசின் அக்கரையின்மையே காரணமாகும். புதுச்சேரி அரசு முன் முயற்சி எடுத்திருந்தால் ஆந்திரம், ஹிமாச்சல் பிரதேசம் போல் புதுச்சேரியிலும் அம்மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட்டிருக்கும்.
புதுச்சேரியில் பழங்குடியினருக்கு அங்கீகாரம் வேண்டுமென்று பல ஆண்டுகளாக அம்மக்கள் போராடியதும், அந்த போராட்டங்களுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் துணை நின்றதால் இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சதவீதம் இடம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதில் விடுபட்ட காட்டுநாயக்கன், குடும்பன், மலைக்குறவன் எர்குலா போன்ற சமூகங்கள் அதில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அத்துடன் நரிக்குறவர்களையும் இப்பட்டியலில் கொண்டுவர கோரிக்கைகள் எழுந்தன.
சென்ற ஆண்டு புதுச்சேரி வந்த எஸ்சி/எஸ்டி ஆணையரை திமுக சார்பில் சந்தித்து நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டி மனு அளித்து வேண்டுகோள் வைத்தோம்.
அதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்திருந்தார். தமிழகத்தில் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த தருணத்தில் அதன் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள நரிக்குறவர்களையும் அப்பட்டியலில் இணைத்து அங்கீகரிக்க புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் இரா.சிவா குறிப்பிட்டுள்ளார்.








