“மின் கட்டண உயர்வு, மக்களுக்கு அதிக சுமை ஏற்படாதவாறு பரிசீலனை செய்யப்படும்” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி புதுச்சேரியில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக, இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று அரசியல்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மின்சார ஆணையத்திற்கு புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்தது. இதனை மின்சார ஆணையம் நிராகரித்த நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக மின் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாயாக இருந்த மின்சாரக் கட்டணம் 2.70 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு 6 ரூபாயும், அதற்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 7.50 ரூபாயாகவும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், “மின் கட்டண உயர்வு, மக்களுக்கு அதிக சுமை ஏற்படாதவாறு பரிசீலனை செய்யப்படும்” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.







