புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து, குடியரசுத் தலைவரிடம் முறையிட நேரம் கேட்டிருப்பதாக, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சமூக நலத்துறை சார்ந்த 36 மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு, ஆளுநர் அனுமதி அளிக்க கோரியும், ஆளுநரை சந்தித்து பேச நேரம் ஒதுக்காததை கண்டித்தும், தடையை மீறி ஆளுநர் மாளிகை அருகே சென்று அமைச்சர் கந்தசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை அருகே செல்ல முயன்ற, முதலமைச்சர் நாராயணசாமியை, துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து அந்த இடத்திலேயே சாலையில் அமர்ந்து, சுமார் 4 மணி நேரம் முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அமைச்சர் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். தொடர்ந்து அமைச்சருடன் முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவரும் போராட்டத்தை கைவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சரை சந்திக்காமல் சர்வாதிகாரி போக்கில் கிரண்பேடி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், வரும் 21, 22-ம் தேதிகளில், ஏதாவது ஒரு தேதியில் சந்திக்க நேரம் ஒதுக்கி தர கோரி, குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அப்போது ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முறையிட உள்ளதாகவும், முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.







