சென்னை திருவொற்றியூரில் ஓராண்டாக மூடி கிடக்கும் ரயில்வே கேட்டைத் திறக்கக் கோரி பொதுமக்கள் ஊர்வலமாக நடந்து வந்து மாநகராட்சி உதவி ஆணையர், மற்றும் வட்ட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
தெற்கு ரயில்வே சார்பில் வடசென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு இந்த ரயில்வே கேட்டானது மூடப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் சுரங்கப்பாதை பணி துவக்கப்படாததால், பள்ளிகளுக்குச் செல்ல பொதுமக்கள் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அவசர காலங்களில் எவ்வித வாகனங்களும் செல்ல முடியாத நிலையில், ரயில்வே கேட் சுரங்கப்பாதை பணியை துவக்கும் வரை மூடி கிடக்கும் ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தியும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக அகற்றப்பட்ட 17 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், பாலகிருஷ்ணா நகர் பிரதான சாலையில் தனியார் குடியிருப்பு மனை பிரிவுவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க 22 அடி சாலையை 50 அடியாக சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கவுன்சிலர் கே.கார்த்திக் தலைமையில் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டலம் 1 உதவி ஆணையர் சங்கரிடம் தங்களது கோரிக்கைக்கான மனுவை கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பூந்தோட்டப் பள்ளி தெருவில் அமைந்துள்ள வருவாய் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வட்டாட்சியர் துளசி ராமராஜிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
—சௌம்யா.மோ






