தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து இன்று காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு பிரசாரம் செய்கிறார்.
மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தவெக தலைவர் விஜய் காரைக்குடி வந்தடைந்தார். காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பிரசாரத்திற்கு 37 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். அதில் முக்கியமாக இன்று மதியம் 12.30 மணியில் இருந்து 2 மணிக்குள் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும், விஜய் எந்த பாதையின் வழியாக வருகிறாரோ அதே பாதையில் திரும்பி செல்ல வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.







