சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் கய் பார்மெலின், 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சுவிட்சர்லாந்து அதிபரை வரவேற்றனர்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள பார்மெலினுடன், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான மக்கள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மேலும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் பார்மெலினுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அரசு விருந்து அளிக்கப்படுகிறது. அக்டோபர் 7-ந் தேதி நடைபெற உள்ள 2-வது இந்தியா-ஈ.எஃப்.டி.ஏ. வளமை உச்சி மாநாட்டில் பார்மெலின் பங்கேற்க உள்ளதால், அவரது பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-ஈ.எஃப்.டி.ஏ. வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி இந்த மாநாடு நடைபெறுகிறது.
ஈ.எஃப்.டி.ஏ. நாடுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டாளியாக சுவிட்சர்லாந்து உள்ளது.
இந்தப் பயணம் இந்தியா-சுவிட்சர்லாந்து இடையேயான நீண்டகால உறவுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், முக்கியமான பொருளாதார மற்றும் மூலோபாயத் துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் பேசிய சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் கய் பார்மெலின் கூறியதாவது:
“உலகளாவிய நிர்வாகத்தில் இந்தியா ஒரு முக்கியமான நாடாக உருவெடுத்து வருகிறது. புவிசார் அரசியலிலும் இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும், சர்வதேச அமைப்புகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருவதையும் சுவிட்சர்லாந்து மதிக்கிறது.
இந்தியா போன்ற முக்கிய நாடுகளுடன் நெருக்கமான மற்றும் ஆற்றல்மிக்க கூட்டாண்மைகளை உருவாக்குவது, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் அவசியமானது.
பிப்ரவரி, 2026 ல் புதுடெல்லியில் இந்தியா நடத்திய ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு, வளர்ந்து வரும் புதிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா வகிக்கும் தலைமைப் பங்கிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்த ஈடுபாட்டை மேலும் தொடரும் வகையில், அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை 2027 ஜூன் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.




