சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த
பாதையை அடைத்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் மாடுகளுடன் ஓமலூர்
வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
ஓமலூர், தாரமங்கலம் ஒன்றியத்தில் கருக்கல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கரட்டுகாடு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதான சாலையில் இருந்து குடியிருப்புகளுக்கு செல்வதற்காக மண் சாலை உள்ளது. இந்த சாலையை அதே பகுதியை சேர்ந்த தரப்பினர் மண்ணை கொட்டி அடைத்துள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் வசிக்கும் சீனிவாசன் உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினர், அவர்களின் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்ல முடியவில்லை. இதனால்,
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சில நாட்களாக ஓமலூர் வட்டாட்சியர், மேட்டூர் ஆர்.டி.ஒ.,
மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரிடத்திலும் ஆக்கிரமிப்பு பாதையை அகற்றி
கோரி மனு கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத நிலையில், ஐந்து குடும்பத்தினரும் நேற்று மாடுகளுடன்
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாதை
அடைக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து நிலத்தை அளவீடு செய்து, அடைக்கப்பட்ட பாதையை மீட்டனர்.
அதிகாரிகள் பாதையை மீட்டு, மீண்டும் அடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகள் பேச்சை மதிக்காமல் மீண்டும் பாதையை அடைத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கு.பாலமுருகன்







