சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விநாயகர் சதுர்த்தி – மதுரை மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமலும் கொண்டாட வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்ட நிர்வாகம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விழாவைக் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளைச் செய்ய, களிமண், வைக்கோல் மற்றும் மக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலி கலவைகள்) போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.

சிலைகளுக்குப் பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்க, மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம். சிலைகளின் ஆபரணங்களை வடிவமைக்க, உலர்ந்த மலர் கூறுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

சிலைகளுக்கு வர்ணம் பூச, நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.அதற்குப் பதிலாக, நீர் சார்ந்த மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பந்தல்கள் மற்றும் அலங்காரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.

விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, நீர் நிலைகள் மாசுபடாதவாறு சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் மூலம், பாரம்பரிய விழாவைக் கொண்டாடும் அதேவேளையில், நம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.