சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் கருத்து கேட்கப்பட்டதா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதிப்பு மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த சொத்து வரி உயர்வு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர். சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை மறுதினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
Advertisement: