ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடு

ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான…

ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தி கொள்ளலாம்.

நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான 10(1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன்  விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிட வேண்டும். 20 நாட்களுக்கு மிகாமல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும். இதற்கு சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழினைப் பெறத் தேவையில்லை.

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக, விதி 12(2)-ன்கீழ் அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து, அதனைப் பயன்படுத்தி விவசாய நிலங்களின் மேம்பாடு மற்றும் திறனை அதிகரிக்கும் பொருட்டு, வேளாண் பெருமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர) கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.